Tuesday, June 28, 2005

நகுலன்

எஸ்.ராமகிருஷ்ணன்
நினைவுப் பாதை
ஒவ்வொரு முக்கிய எழுத்தாளரையும் தேடிச் சென்று பார்ப்பது என்று எனது இருபது வயதில் புறப்பட்டபோது, அது ஒரு சாகசப் பயணம் போல அமையக்கூடும் என்றே நினைத்தேன்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் எழுதிக்கொண்டு இருக்கும் எத்தனையோ எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பில் ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலானவை கசப்பான அனுபவங்களே!
எழுத்தாளன் ஒரு விசித்திரப் பிறவி என்பதில் நம்பிக்கையற்றவன் நான். எழுதுவது என்பது ஒரு வேலையல்ல, பொறுப்பு உணர்ச்சி என்று நம்புகிறவன்.
தாலூகா அலுவலகம் ஒன்றில், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பம் செய்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கே உள்ள அதிகாரி, Ôஎன்ன வேலை செய்கிறீர்கள்?Õ என்று கேட்டதும், Ôரைட்டர்Õ என்றேன்.

அந்த அதிகாரி பென்சிலை உருட்டிக் கொண்டே, Ôஎந்த ஸ்டேஷன்ல?Õ என்று கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கேள்வியும் புரியவில்லை. அவராகவே Ôபோலீஸ் ரைட்டர்தானே?Õ என்ற பிறகுதான் கேள்வியின் பின்புலம் எனக்குப் புரிந்தது. எழுத்தாளர்களைத் தேடிக் காண்பது என்ற எனது ஊர்ச் சுற்றலில்தான் நகுலனை முதன்முதலாகச் சந்தித்தேன். நகுலன் ஒரு நல்ல கவிஞர், நாவலாசிரியர்.
திருவனந்தபுரத்தில் அவரது வீடு, கௌடியார் என்ற பகுதியில் இருக்கிறது. நான் பார்க்கச் சென்ற நாட்களில், அவரது Ôநாய்கள்Õ என்ற நாவல் வெளியாகியிருந்தது. Ôநாய்களைப் பற்றி ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாரே!Õ என்று ஆச்சரியத்துடன் அதை வாசிக்கத் துவங்கினேன். நாவலில் ஓர் உருவகமாக, நாய் என்ற படிமத்தைப் பயன்படுத்தி இருந்தார்.
நாவல் முழுவதும் மெல்லிய கேலியும் கவித்துவமும் தத்துவத் தெறிப்புகளும் நிறைந்திருந்தன. முன்னதாக நகுலன் கவிதைகள் மீது கொண்ட ஈடுபாடு, இந்த வாசிப்பினை அதிகப்படுத்தவே, அவரைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன்.
நகுலன் திருமணம் செய்துகொள்ளாதவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று தனிமையில் வாழ்பவர். அவருக்குள்ள ஒரே துணை ஒரு பூனை மட்டும்தான்!
ஒரேயரு வேலைக் காரப் பெண் உண்டு. அவர், பல வருடங்களாக அந்த வீட்டில் வேலை செய்து, நகுலனின் சகோதரி போல, அவர் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தார்.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் நகுலன். அவரது வீடெங்கும் புத்தகங்களே நிரம்பி இருந்தன. பசுமையான மரங்களடர்ந்த ஒரு சரிவில் உள்ளது அவரது வீடு. நகுலன் தன்னைத் தேடி வருபவர்களோடு கொள்ளும் உறவு விசித்திரமானது. சந்தித்த மறு நிமிடமே, ஒரு குழந்தையைப் போல ஏதேதோ கேட்கத் துவங்கிவிடுவார். அது ஒருவிதமான நட்பாக வளர்ந்து செல்லும்.
‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணனா?’Õ
‘Ôஆமாம்!’Õ என்று தலையாட்டினேன்.
அவர் சிரித்துக்கொண்டே, ‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’Õ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல், நானும் சிரித்தேன்.
நகுலன் தனது புன்னகை படரும் முகத்தோடு, Ô‘எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க?’Õ என்று கேட்டார். கேலியாக இருந்தாலும், இந்தக் கேள்வி எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
Ô‘பிறந்ததிலிருந்து ராமகிருஷ்ணனாகவே இருக்கிறேன்’Õ என்றேன். அவர் அதை ரசித்தவர் போல, ‘Ôபிறந்ததில் இருந்தா?’Õ என்று சத்தமாகச் சிரித்தார். Ôஅந்தச் சிரிப்பின் ஆழம் எத்தகையது?Õ என்று வியப்போடு பார்த்தேன்.
அவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘Ôநான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமா?Õ’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘Ôபூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?’Õ என்று கேட்டேன். Ô‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?’Õ என்றார்.
இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், Ôஎன்ன இது பிதற்றல்?Õ என நினைப்பான். ஆனால், அதுதான் நகுலன்!
அவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும். உலகின் மீதான அவரது வியப்பும் ஈடுபாடும் தர்க்கங்களை மீறியது.
பேச்சு எங்கெங்கோ சுற்றி, எழுத்தாளர்களைப் பற்றிய தாகத் திரும்பியது. நகுலன், தான் ஒரு எழுத்தாளரைப் பார்க்கப் போனதைப் பற்றி நினைவுகூர்ந்தார்.
1980&களில் பிரபலமாக இருந்த ஒரு நாவலாசிரியரைப் பார்க்க நகுலன் சென்று இருந்தார். எழுத்தாளர் ஒரு வியாபாரியாகவும் இருந்தார். நகுலன் பார்க்கச் சென்றபோது, அவர் தனது கடையில் இருந்துகொண்டே, Ôஆள் ஊரில் இல்லைÕ என்று எதனாலோ சொல்லி அனுப்பி விட்டார். நகுலனுக்கு Ôஅவர் உள்ளேதான் இருக்கிறார்Õ என்று உறுதியாகத் தெரிந்தது. ஆகவே, மாலை வரை அங்கேயே காத்திருந்து, எழுத்தாளர் வெளியே வந்ததும், பின்னாடியே சென்று முதுகில் ஒரு தட்டுத் தட்டி, Ôசார்... நானும் ஊரில் இல்லைÕ என்று சொல்லிவிட்டு, மறு நிமிடமே புறப்பட்டு திருவனந்தபுரம் வந்துவிட்டாராம். இதைச் சொல்லி முடித்த நிமிடத்தில், நகுலன் கண்களில் இருந்த கேலி, சிறுவர்களுக்கு மட்டுமே உரியது.
நான் பேசிக்கொண்டு இருந்த காலையில், மருத்துவச் சோதனை ஒன்றுக்காக அவர் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. மதியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு, வெளியே வந்துவிட்டேன். திரும்பவும் மாலையில் நான் சென்றபோது, காலையில் கேட்ட கேள்விகளையே மறுபடி கேட்டார்.
‘Ôநீங்கதானே ராமகிருஷ்ணன்?’Õ
‘Ôஆமாம்!’Õ
‘Ôஅப்போ, காலையில் Ôராமகிருஷ் ணன்Õனு ஒருத்தர் வந்திருந்தாரே, அவர் உங்களுக்குத் தெரிந்தவரா?Õ’ ‘Ôஓரளவுக்குத் தெரியும்’Õ என்றேன். நகுலனின் சிரிப்பு பீறிட்டது. ‘Ôஅப்போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததை உங்களிடமும் பேசலாம், இல்லையா?Õ என்று கேட்டார். உரையாடலைத் தத்துவத்தின் உயர்ந்த நிலைகளை நோக்கி நகர்த்திப் போகும் கலை அவருக்கே உரியது.
ஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, Ôஇவள் அழகாக இருக்கிறாளா?Õ என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், Ôகண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா? அது எப்படி சார்?Õ என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
நகுலன் சாலையில் செல்லும் சைக்கிள்காரனைப் பற்றி, தெருநாயைப் பற்றி, கோடையில் பெய்த மழையைப் பற்றி, இறந்துபோன அம்மாவைப் பற்றி எனப் பேச்சின் சுழல்வட்டத்துக்குள் நீண்டுகொண்டு இருந்தார்.
அவரைச் சந்தித்து வந்த நீண்ட காலத்துக்கு, அந்தக் கேள்வி என் மனதில் நீந்திக்கொண்டே இருந்தது. நான் ராமகிருஷ்ணன் என்று எனக்கு எப்படித் தெரியும்?
சிறுவர்களின் தீரா விளையாட்டைப் போல, உலகை ரசிக்கும் பக்குவமும் மனதும் அவரிடம் இருந்ததை அறியத் துவங்கினேன். அதன் பிறகு பலமுறை நகுலனைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு தனித்த அனுபவம்!
ஒரு முறை நகுலன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்தபடி, சாலையில் போகிறவர்களுக்குக் கையசைத்துக்கொண்டு இருந்தார். பள்ளிச் சிறுவர்கள் சிலர் கையசைத்துப் போனார்கள். அவர் கையசைத்தபடியே என்னிடம் கேட்டார்...
Ô‘நான் இறந்துபோன பிறகு, Ôஇந்த வீட்டில் கை காட்டும் கிழவன் ஒருவன் இருந்தான்Õ என்று குழந்தைகள் நினைப் பார்கள், இல்லையா? அதற்குத்தான் கையசைக்கிறேன்’Õ என்றார். இந்த ஆதங்கத்தின் கீழ் இருந்த துக்கம், ஒரு தேளின் விஷக்கடுப்பைப் போல என் உடலெங்கும் தாக்கியது.
நகுலனை Ôஎழுத்தாளர்களின் எழுத்தாளர்Õ என்பார்கள். அவருக்கு வயது முற்றி, எண்பத்து இரண்டைத் தாண்டி நீள்கிறது. ஆனாலும், அவர் மனதில் இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போல வார்த்தைகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
நகுலனின் கதைகளில் பிடித்தமானது, Ôஎட்டு வயதுப் பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும்Õ என்ற கதை. இதைக் கதை என்று சொல்ல முடியாது. ஒரு நிகழ்வு!
அதுவும், ஒரு சிறுமி நகுலனின் வீட்டுக்கு வந்து, அவரோடு பழகியதைப்பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு என்றுகூடச் சொல்லலாம். இக்கதை கவிதையின் சூட்சுமம் பற்றியது.
சிமி என்ற எட்டு வயதுச் சிறுமி, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். அவள் ஒரு நாள் Ôபடிப்பதற்காக ஏதாவது புத்தகம் வேண்டும்Õ என்று நகுலனின் வீட்டுக்கு வருகிறாள்.
நகுலன், அவள் படிப்பதற்காக குஞ்சுண்ணி என்ற மலையாளக் கவிஞரின் புத்தகத்தைத் தருகிறார். அந்தக் கவிதைத் தொகுதியை வாசித்து விட்டு, குழந்தை மறுநாள் Ôசிமி குமி உமிக்கரிÕ என்று ஒரு கவிதையை எழுதி வந்து காட்டுகிறது.
அக்கவிதைகூட குஞ்சுண்ணி கவிதை போலவே சந்தமும் சொற்சிக்கனமும் கொண்டு இருக்கிறது. நகுலன் அந்தச் சிறுமியின் கவிதையை ரசித்தபடி, Ôநல்ல கவிதை, வாசிப்பவரை உடனே அதைப் போல ஒன்றை உருவாக்கச் செய்வதுதான்Õ என்று பாராட்டுகிறார்.
அதோடு, Ôகவிதை என்பது சப்த ஒழுங்கால் உருவாவது என்று சிறுமிக்குப் புரிந்திருக்கிறதுÕ என்று பாராட்டுகிறார்.
இக்கதை வழக்கமான கதைகளைப்போலப் பெரிய சம்பவம் எதையும் சொல்லவில்லை. மாறாக, குழந்தைகளின் விளையாட்டைப் போலத்தான், கவிதையும் ஒரு எதிர்பாராமையும் அழகும் கொண்டு இருக்கிறது என்ற நிதர்சனமான உண்மையை வெளிப் படுத்துகிறது.
எழுத்தின் ரகசியங்களைக் கற்றுக்கொள்வதற்கு நாம் எழுத்தாளனை அணுகினால், அது நிச்சயம் ஏமாற்றமாகவே முடியும்.
Ôபெரிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை, சிறிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம்Õ என்று யுத்த சாஸ்திரம் கூறுகிறது.
அந்த நூலை எழுதியவன் ஒரு பௌத்த பிக்கு. ஒருவகை யில் இதுதான் எழுத்தின் ரகசியம். இதைக் கற்றுத் தருபவன், கதையை எழுதியவன் இல்லை. மாறாக, ஒரு நாடோடி.
கற்றுக் கொள்வதற்கு ஆசானை விடவும் மனம்தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. மனதைக் குழந்தையைப் போல வைத்துக்கொள்வது எளிதானதா என்ன?
நகுலன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்துவருபவர். எண்பத்திரண்டு வயதான இவர், தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர்.
பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். Ôஎழுத்துÕ இதழில் எழுதத் துவங்கியவர்.
நகுலன் கவிதைகள், நாய்கள், ரோகிகள், வாக்குமூலம், மஞ்சள்நிறப் பூனை போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவர் தொகுத்த Ôகுரு«க்ஷத்திரம்Õ இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.
http://www.vikatan.com/av/2005/may/22052005/av0602.asp