Tuesday, June 28, 2005

பாவண்ணன்

http://www.vikatan.com/av/2005/jun/05062005/av0602.asp
பரிகாரம்
எஸ்.ராமகிருஷ்ணன்


யானைகளைப் பார்ப்பதற்காகவே சிறு வயதில் நான் கோயிலுக்குப் போவேன். அப்போது யானைகள் வீதி வீதியாக வரும். முகப்படாம் பூட்டிய யானையின் அருகில் நடக்கும்போது, அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருக்கும்.
ஒரு முறை, பாரதியாரை நேரில் பார்த்துப் பழகிய கல்யாணசுந்தரம் என்பவரைக் காண்பதற்காக கடையத்துக்குச் சென்றிருந்தேன். அவர் சிறுவனாக இருந்தபோது, பாரதியார் கடையத்தில் வசித்திருக்கிறார். ஆகவே, அவருக்கு பாரதியுடன் பழக்கம். பாரதியார் அந்த நாட்களில் சாதி விலக்கம் செய்யப்பட்டு, ஊருக்கு வெளியே வாழ்ந்துகொண்டு இருந்தார். அதனால் சாப்பாடு கொண்டு போய்க் கொடுப்பது, மற்றும் தபால் அலுவலகத்தில் போய்க் கடிதங்களைப் போடுவது போன்ற சிறிய வேலைகளுக்கு கல்யாணசுந்தரம் பயன்பட்டிருக்கிறார்.
அவர் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு இருந்தபோது, ‘பாரதியாருக்கு யானைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆசையோடு யானையின் தும்பிக்கையைத் தடவிக் கொடுத்தபடி இருப்பார். சில வேளைகளில் யானையின் தும்பிக்கையைப் பிடித்து, தனது பற்களால் மெதுவாகக் கடித்து விளையாடுவார்’ என்று தான் கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார். நிஜமா, வெறும் கற்பனையா எனத் தெரியவில்லை!

ஆனால், அதைக் கேட்டதும் பாரதியின் மீது இனம்புரியாத நெருக்கம் உருவானது. குழந்தைகள்தான் தன் கையில் பிடித்த எதையும் கடித்துப் பார்க்கும் சுபாவம் கொண்டவர்கள். பாரதியாருக்குள்ளும் அதுபோன்றதொரு குழந்தைமை மேலோங்கி இருந்திருக்கிறது.
யானையிடம் எனக்கு ரொம்பவும் பிடித்தது, அதன் காதுகள்! ஒரு தாமரை இலை அசைவது போல, அது தன் காதை ஆட்டிக்கொண்டே இருக்கிறது. உலகின் மொத்த ஓசையையும் அது தனக்குள்ளாக வாங்கிக்கொள்ள ஆசைப்படு கிறதோ என்று தோன்றும்.
யானையைப் பார்க்கச் சென்று, யானைப் பாகனையும் யானையை நேசிக்கும் மனிதர்களையும் காணத் துவங்கினேன். குறிப்பாக, ஒரு பெண்மணி எல்லா நாளும் மாலை ஆறு மணிக்குக் கோயிலுக்கு வந்து நிற்பார். யானையின் அருகே வந்து நின்றபடி, அதை வியப்போடு பார்த்துக்கொண்டே இருப் பார். அவருக்கு யானை களைச் சங்கிலியிட்டுக் கட்டுவது பிடிக்காது. ஒவ்வொரு நாளும் அந்தக் கனத்த சங்கிலியைத் தன் கைகளால் தூக்கிப் பார்த்துவிட்டு, Ôஇதையா கட்டுகிறார்கள்?Õ என்பது போல முகம் சுளிப்பார்.
பிறகு, ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, இரவு எட்டு மணி வரை யானையை அணுஅணுவாக ரசித்துக் கொண்டு இருப்பார்.
அவர் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியையாக வேலை செய்கிறார் என்றும், திருமணமாகி சில மாதங்களிலேயே பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டதாகவும், அதன்பிறகு வேலைக்குச் செல்லத் துவங்கி, அன்றி லிருந்து தனது சம்பளத்தில் முக்கால்வாசியை கோயில் யானைக்குக் கொடுத்து விடுவதாகவும் கேள்விப் பட்டபோது ஆச்சர்யமாக இருந்தது.
எதற்காக அவர் யானையை நேசிக்கிறார்? யானையைப் பார்த்துக் கொண்டு இருப்பதே தன் வாழ்வின் உயர்ந்த நிமிடங்கள் என்று எண்ணுகிறாரா?
கோயில் யானையை அழைத்துக் கொண்டு போய் யாசகம் கேட்பதைக் கண்டால், அவர் கடுமையாகக் கோபப் படுவார். மற்றபடி, அவர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதோ, நெற்றியில் திருநீறு அணிவதோகூடக் கிடையாது. பாகன்கள் அவரை Ôயானைக்காரம்மாÕ என்றே அழைப்பார்கள்.
யானைகளுக்கும் பாகன்களுக்கும் உள்ள உறவு வித்தியாசமானது. அவன் தனது தூக்கத்திலும் யானையைப் பற்றியேதான் நினைத்துக்கொண்டு இருப்பான். யானையும் அவனது சிறு கண்ணசைவுகளைக்கூட கவனித்து நடந்துகொள்ளக்கூடியது.
யானைக்கு மதம் பிடித்த நாட்களில், அது முதலில் பாகனைத்தான் தேடும் என்பார்கள். பழிவாங்குவதற்காக அல்ல, தனது சுகமோ, துக்கமோ... அது பகிர்ந்துகொள்வதற்கு இருக்கும் ஒரே நபர் பாகன்தானே!
யானைப் பாகன்கள் யானையை அடிப்பதைக்கூட எளிதாகச் செய்து விடுவார்கள். ஆனால், யானையைப் பற்றி திட்டுவதை மிகக் கவனமாகத்தான் செய்வார்கள். பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள்.
பெண்கள் எவரும் யானைப் பாகனாக இருந்தோ, யானைகளின் மீதேறிச் சென்றோ நான் பார்த்தது இல்லை. சிறுகுழந்தைகளில்கூட பெண் பிள்ளைகள் ஏறும்போது, Ôபொம்பளை பிள்ளைக்கு என்னடி யானை சவாரி?Õ என்று திட்டுவார்கள். ஒரு நாள் யானைக்காரம்மாவிடமே இதைக் கேட்டுவிடுவது என்று அருகில் சென்று கேட்டேன். Ôநீங்கள் யானை மேலே சவாரி போயிருக்கீங்களா?Õ
அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்க வில்லை. சத்தமாகச் சிரித்தபடி, யானைப் பாகனைப் பார்த்து, Ôஇந்தப் பையன் என்ன கேட்கிறான், பார்த்தியா?Õ என்று என் கையைப் பிடித்துக்கொண்டார். அவர் கை மிகக் குளிர்ச்சியாக இருந்தது.
அவர் தன் கண்ணாடியைச் சரிசெய்த படியே, Ôஎனக்கும் சின்ன வயசிலே இருந்து ஆசைதான். ஆனா, நான் ஆசைப்பட்ட எதுவுமே நடக்கலையே! இது மட்டுமா சரியா வந்துடப் போகுது?Õ என்றபடி, Ôஉனக்கு யானையை ரொம்பப் பிடிக்குமா?Õ என்று கேட்டார். அவர் சொன்ன பதிலைவிடவும் அவளது குரலில் ஒளிந்திருந்த துக்கம்தான் என்னை அவரோடு அதிகம் நெருக்க மாக்கியது.
அதன்பிறகு Ôயானைக்காரம்மாவின் விருப்பத்துக்குரிய சிறுவன்Õ என்ற விசேஷ அந்தஸ்தால், நான் பல நேரம் யானையின் அருகில் பாகனைப் போல் நிற்பதற்கும், யானையின் துதிக்கையில் இருந்து காசை வாங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். (யானையின் துதிக்கை வழியாக வரும் காற்று, உள்ளங்கையில் படும் அனுபவம் இன்றுவரை சிலிர்ப்பு ஊட்டக்கூடியது!).
ஒரு நாள் யானையின் அருகில் நின்றபடி நானும் யானைக்காரம்மாவும் பேசிக்கொண்டு இருந்தபோது, ஒரு குடும்பம் கைக்குழந்தை யோடு கோயிலுக்கு வந்தது. அந்தக் குழந்தையை யானையிடம் ஆசி வாங்க வைப்பதற்காக, பாகனிடம் கொடுத்தார்கள். ஆனால், யானை ஏனோ ஆசி தர மறுத்தது. பாகனுக்கு Ôஅது ஏன் இப்படி நடந்து கொள்கிறது?Õ என்று புரியவில்லை. அதைக் கவனித்தது போல, யானைக்காரம்மா தயக்கத்துடன் அந்தக் குழந்தையைத் தன்னிடம் தருமாறு பெண்ணிடம் கேட்டார். அவள் தன் கணவனைப் பார்க்க, அவர் முகத்தில் சலனமே இல்லை. குழந்தையை யானைக் காரம்மா கையில் கொடுத்தாள். யானைக்காரம்மா கையில் குழந்தை யோடு யானையிடம் நீட்டியதும், யானை ஆசி தந்தது. அந்தப் பெண் வியப்போடு குழந்தையைத் திரும்ப வாங்கிக்கொண்டு வெளியேறிப் போனாள்.
பின்பு யானைக்காரம்மா சொன்னார், Ôஅவர்கள் என் கணவரும், அவரது இரண்டாவது மனைவியும்Õ என்று. பாகன் துக்கத்தால் தலை கவிழ்ந்தார்.
பெண்கள் வாழ்நாள் முழுவதும் படகின் இரண்டு துடுப்பைப் போல பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற இரண்டு வீடுகளுக்குள் ஊசலாடுகிறார் கள். அதிலும், பெண்ணின் வாழ்வும் தாழ்வும் அவள் திருமணத்தைச் சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது. வீட்டு நாய்கள்கூட பழகிய மனிதர் களை, இடங்களைவிட்டுப் பிரிந்து போக இயலாமல் தத்தளிக்கும்போது, பெண் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு, யாவையும் மறந்து, இன்னொரு இடத்தில் வாழ வேண்டிய கட்டாயம் உருவாக்கப் பட்டு இருக்கிறது.
படித்த கல்வி, தனித்திறன், விளை யாட்டு யாவும் ஒடுக்கப்பட்டு, எத்தனையோ ஆயிரம் பெண்கள் வீட்டின் சுவர்களுக்குள் அடங்கி வாழ் கிறார்கள். வாழ்தலின் சுவை, அவர் களுக்குப் பழக்கப்படுத்தப்படவே இல்லை. அவர்கள் வாழ்வின் நறுமணத்தை ஆழமாக முகரவே இல்லை. அதற்குள் வயதேறி, நரையும் நோயும் பற்றிக்கொண்டுவிடுகிறது.
புறக்கணிப்பு என்ற அகன்ற கைகளின் உக்கிரத்துக்குப் பயந்துதான் பெரும்பான்மையான பெண்கள் வாழ்கிறார்கள். புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வு, முணுமுணுப்புகள் நிரம்பியது.
பாவண்ணன், பெண்களின் அகவுலகச் சிக்கல்கள் குறித்துக் கூர்ந்த அக்கறை கொண்டவர். சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர்.
அவரது ‘அடி’ என்ற கதை, புறக் கணிக்கப்பட்ட பெண்ணின் துயரக் குரலை வெளிப்படுத்துகிறது. பச்சை மரங்களில் விழுந்த வெட்டு போல, இக்கதை வாசகனின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கிவிடக் கூடியது. கதை, விலக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. திருமணமாகிச் சேர்ந்து வாழ்வதற்கு இஷ்டமில்லாமல் விலக்கி வைக்கப்பட்ட பெண் ஒருத்தி, தன் கணவனைத் திரும்பத் தேடி வருவதில் கதை துவங்குகிறது.
திருமணமாகிச் சேர்ந்து வாழப் பிடிக்காமல், பெண்ணால் விலக்கி வைக்கப்பட்டவன் என்று ஏதாவது ஒரு ஆண் இருக்கிறானா என்று எனக்குத் தெரியவில்லை!
தங்கசாமி, ராதா இருவரும் சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒரு நாள் ராதா, ஏதோ வீட்டு வேலையில் இருந்தபோது, குழந்தை தவழ்ந்து போய், புழக்கடை கிணற்றில் விழுந்து இறந்துவிடுகிறது. அந்தச் சம்பவம் ராதாவைச் சித்தம் கலங்கச் செய்துவிடுகிறது.
ஆனால், தங்கசாமி சில மாதங்களில் யாவையும் மறந்து, குடும்பம் நடத்த முயல்கிறான். ராதாவால் அந்த நினைவிலிருந்து மீள முடியவில்லை. மேலும், குழந்தைச் சாவை தங்கசாமி மறந்துபோனதைத் தாங்க முடியாமல், வெறிகொண்டவளாகிறாள்.
சொந்தக்காரர்கள் ஏற்பாட்டின் பேரில், தங்கசாமி இரண்டாம் திருமணம் செய்துகொண்டுவிடுகிறான். அவளுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. ராதாவைத் தள்ளி வைத்துவிட்டு, அவளுக்கு அவ்வப்போது ஏதாவது உதவிகள் செய்கிறான்.
ராதா எப்போதாவது தங்கசாமி வீட்டின் முன்பு வந்து, மிகக் கொச்சையான வசைகளைத் திட்டி, அவனோடு சண்டையிடுவாள். பிறகு துரத்திவிடுவார்கள்.
கதை துவங்கும்போதும் அப்படி ராதா வந்து தெருவில் நின்றுகொண்டு கத்துகிறாள். அதைச் சகிக்க முடியாமல் தங்கசாமி அவளை அடிஅடியென அடித்துவிடுகிறான். அடிபட்ட வலியுடன் தெருவில் புரண்டபடி அவனைப் பார்க்க வேண்டும் போல மனதில் இருந்ததாகவும், அதனால் சும்மா பார்த்துப் போகத்தான் வந்த தாகவும் சொல்கிறாள். அது பைத்தியத் தின் குரலாகத் தெரியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது. அவிழ்ந்து கிடந்த தனது உடைகளைச் சரிசெய்தபடி, ராதா திரும்பவும் கல்லை எடுத்து தங்கசாமி மீது வீசியபடி கத்திக்கொண்டு தெருவில் நடந்து போகிறாள். யார் பைத்திய மாக நடந்துகொண்டது என்ற புதிர் கதையைச் சுற்றிலும் படர்ந்து விடுகிறது.
‘உறவிலே வேகிறதைவிட, ஒரு கட்டு விறகிலே வேகலாம்!’ என்று ஒரு சொலவடை இருக்கிறது. வாழ்வுக்கு வலு சேர்ப்பதற் காக உருவாக்கப்பட்டது தான் எல்லா உறவுகளும்! அது கலையாவதோ, சுயநலமாவதோ எப்போதும் சரியானதல்ல.
உறவு இரண்டு வகைப் பட்டது. ஒன்று பாலில் ஒரு சொட்டுத் தயிரை விட்டதும் மொத்தப் பாலும் தயிராவது போல, ஒரு உறவின் வழியாக எல்லா உறவுகளும் ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியமாகிவிடுவது. மற்றது பாலில் ஒரு சொட்டு உப்பு கலந்து விடுவது போல. அது, மொத்தப் பாலையும் திரியச்செய்துவிடும்.
மிருகங்களைப் பழக்கி, நம் இஷ்டப்படி வேலை செய்யச் செய்வது எளிதானது. ஆனால், மனிதர்களைப் பழக்கி நெறிப்படுத்துவது எளிதானதல்ல. காரணம், மிருகங்கள் தங்களைப் பற்றி ஒருபோதும் பெருமை பேசிக் கொள்வதோ, அதீத சுய கற்பனை கொள்வதோ இல்லை!
பாவண்ணன், தமிழ்ச் சிறுகதைகளில் தனித்துவமான கதை சொல்லும் முறை கொண்டவர். பாண்டிச்சேரியில் பிறந்த இவர், தற்போது பெங்களூரில் வசிக்கிறார். கன்னட இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து, அதற்காக மொழி பெயர்ப்புக்கான Ôசாகித்ய அகாடமிÕ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று நீண்ட எழுத்து இயக்கம் கொண்டவர். இவரது Ôபாய்மரக் கப்பல்Õ நாவல் குறிப்பிட்டத்தக்கதாகும். இணையத்திலும் சிறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வரும் பாவண்ணன், தொலைதொடர்புத் துறையில் வேலை செய்கிறார்.