Tuesday, June 28, 2005

ச.தமிழ்செல்வன்

எஸ்.ராமகிருஷ்ணன்
சரித்திரத்தின் சாலை


ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் மாளிகையின் முன்பாக நின்றிருந்தேன். காவிரியாற்றின் கரையிலிருக்கிறது அந்த அரண்மனை. பசுமையான புல்வெளிகள், காலத்தின் பழமையேறிய கட்டடங்கள்... கர்நாடகாவில் மைசூருக்குப் போகும் வழியில் உள்ளது இந்தச் சிறிய நகரம். பழுப்பேறிய கட்டடங்களைக் கண்டவுடனே மனம் காலத்தின் பின் சரிந்துவிடுகிறது.
உண்மையில் சரித்திரம் என்பதுதான் என்ன? மன்னர்களும் யுத்த களங்களும் இடிந்துபோன கோட்டை கொத்தளங்களும் மட்டும்தானா? இல்லையென்றே தோன்றுகிறது. கல்லில் அல்ல, ஒவ்வொரு மனிதனின் மனதில்தான் சரித்திரம் எழுதப்படுகிறது. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை கோடி சரித்திர உண்மைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஒரு சரித்திர சாட்சிதான்!
திப்புவின் அரண்மனையில் அவரது காலத்தைய நாணயங்கள், உடைவாள்கள் மற்றும் அரியணைகள் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த உடைவாள்களையும் கவசங்களையும் பார்க்கும்போது, அடிமனதில் குதிரைகளின் குளம்பொலி தானாகவே கேட்கத் துவங்கிவிடுகிறது. குதிரைகள் இல்லாமல் சரித்திரத்தைப் பற்றிக் கனவு காண முடியுமா என்ன?
வரலாறு என்பது அரசர்களுக்கு மட்டுமேயானதில்லை. அது ஒரு கால சாட்சி. ஒரு நூற்றாண்டு முடிந்து இன்னொரு நூற்றாண்டு பிறக்கும்போது முந்தைய நூற்றாண்டு முடிந்து விடுவதாக ஒரு தோற்றம் உருவாகிறது. அது நிஜமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. உண்மையில் இப்போதும் குகையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். அப்படியானால் கற்காலம் இன்னமும் தொடர் கிறதா?
இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் மன்னராட்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. ராஜ விசுவாசம் மட்டுமே வாழ்வியல் முறை யாக உள்ளது. அப்படியானால் மன்னராட்சி காலம் முடிய வில்லையா? வன்முறையும் பிரிவினையும் யுத்தமும் சேர்ந்து இன்றைய மனிதன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று பாகுபடுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறது.
எனக்கு திப்பு சுல்தானை ரொம்பவும் பிடிக்கும். அவன் ஒரு சாகசக்காரன்.
திப்பு, ஸ்ரீரங்கப்பட்டினத்தின் பெருமாளுக்கும் ஏராளமாகத் திருப்பணிகள் செய்தவன். விதவித மான புலிகளை வளர்ப்பதில் நாட்டம் கொண்டவன். வங்காளப் புலியன்றை அடைவதற்காக வங்காளத்து அரசகுமாரியை மணந்துகொண்டவன். அவனிடம் புலிப்படை இருந்தது. அவன் இயந்திரப் புலி ஒன்றை உருவாக்கி வைத்திருந்தான். அதன் கண்கள் வைரத்தால் ஆனவை. அந்தப் புலி நிஜமாகவே உறுமவும் எதிரியின் மீது பாயவும் கூடியது போல அமைக்கப்பட்டிருந்தது.
வெள்ளைக்காரத் துரைகள் விருந்துக்கு வரும்போது அவர்களை அந்த அறைக்குள் அழைத் துச் செல்வான் திப்பு. எதிர்பாராத ஒரு இடத்தில் இருந்து அந்த இயந்திரப் புலி உறுமியபடி பாய்ந்து வரும். அச்சத்தில் வெள்ளைக் காரத் துரைகளுக்குக் கைகால் நடுக்கம்வந்துவிடும். திப்பு அதைக் கண்டு வாய்விட்டுச் சிரிப் பான். திப்புவைப் பிடிப் பதற்கு நடந்த யுத்தத்தின் போதுதான் வெள்ளைக் காரர்கள் மக்கள் எழுச்சியை நேரடியாகக் கண்டார்கள். திப்பு மக்களின் நாயகனாக விளங்கியவன்!
திப்புவின் அரண்மனையில் வாழ்ந்து அவனது தினசரி நடவடிக்கைகளை ஓவியமாக்கிய இரண்டு ஃபிரெஞ்ச் ஓவியர்களின் தைல வண்ண ஓவியங்களை ஒரு முறை டெல்லியில் கண்டிருக்கிறேன். திப்புவின் கம்பீரம் அவனது உடைகளில், அறைகளில் ஏன் காலணிகளில் கூடப் படிந்திருக்கிறது.
திப்பு பிடிபட்ட பிறகு வெள்ளைக் காரர்கள் செய்த முதல் வேலை இந்தியா முழுவதும் நில அளவை எடுக்க வேண்டும்... ஒவ்வொரு பகுதிக்கும் துல்லியமான ஒரு வரைபடம் உருவாக்க வேண்டும் என்ற சர்வே பணியைத் துவக்கியதுதான். இந்தப் பணி சென்னையில் உள்ள தாமஸ் மவுண்ட்டில் தான் துவங்கியது. லாம்டன் சர்வே என்று அழைக்கப்படும் அதன் நினைவாக இப்போதும் மவுண்ட்டில் ஒரு நினைவுக் கல் இருக்கிறது. இந்த சர்வே யின் முடிவில்தான் எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படித்தான் காலம் ராவணனின் கோட்டையைப் போல ஒன்றுக்குள் ஒன்று சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கக் கூடியது. இந்தச் சுழல் பாதைக்குள் சுற்றி வரத் துவங்கினால் அதற்குமுடிவே இராது.
காலத்தை ஒரு நீருற்றைப் போலத் தான் நான் கற்பனை செய்து கொள்கிறேன். காலம் சதா எல்லா திசைகளிலும் பொங்கி வழிந்துகொண்டு இருக்கிறது. நீருற்றின் வேகமும் விசையும் முன் அறிய முடியாதது.
சரித்திரச் சின்னங்களை நோக்கிச் செல்லும்போதெல்லாம் என் மனதில் உருவாவது இத்தனை பெரிய கோயில் களை, அரண்மனைகளைக் கட்டுவதற்கு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்? எங்கே தங்கியிருப்பார்கள் அந்தக் கூலிகள்? வீட்டைப் பிரிந்து வந்து வருடக்கணக்கில் தங்கிவிட்ட சிற்பிகளுக்குத் தங்கள் குழந்தைகளின் முகமாவது நினைவில் இருக்குமா?
உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் உள்ள இடத்தில் என்றோ ஒருவன் ஆடு மேய்த்திருப்பான் இல்லையா? அப்போது அந்த இடத்தில் தாஜ்மகால் உருவாகவிருக்கும் சுவடு தெரிந்திருக்குமா அல்லது இன்றைய தாஜ்மகாலில் அந்த ஆட்டுக்குட்டிகளின் மூச்சொலியைத் தான் கேட்க முடியுமா?
காலம் உடைவாட்களில் மட்டும் உறைந்திருப்பதில்லை. என் வீட்டு ஆட்டு உரல் நூறு வருடம் கடந்து விட்டிருக்கிறது. அருவாள்மணை ஐந்து தலைமுறை கடந்து வந்திருக்கிறது. வாசலடியில் நிற்கும் வேம்பு வெள்ளைக்காரர்களைக் கண்டிருக் கிறது. படுக்கையறையின் மரக் கட்டில் ஆயிரமாயிரம் முத்தங்களை அறிந்திருக்கிறது. சிலந்தி வலை போல காலம் யாவர் வீட்டிலும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் படிந்து கொண்டுதான் வருகிறது என்றால், உலகத்துக்கு மிகவும் வயதாகிவிட்டதா என்றும் நினைக்கத் தோன்றுகிறது. நிஜம்தானே. நாம் பார்க்கும் சூரியன் எத்தனை ஆயிர வருடப் பழமையானது? இந்த நிலவு எத்தனை கோடிக் கண்கள் பார்த்துப் பழகியது? இந்த பூமிக்குள் எத்தனை லட்சம் எலும்புகள் புதையுண்டுகிடக்கின்றன? களிம்பேறிய பித்தளைப் பாத்திரம் போலப் பழமையானதுதானா உலகம்?
இது உண்மை என்று ஏற்றுக் கொள்ளும்போது மனது புரண்டு கொண்டுவிடுகிறது. நேற்று பார்த்த வெயில் வேறு, இன்று பார்க்கும் வெயில் வேறு... நேற்றைய நிலவை மறைத்த மேகம் இன்றில்லை என்றால், ஒவ்வொரு நாளும் புதிதானதுதானே? ஒரே நேரத்தில் பழமையாகவும் மிகப் புதுமையாகவும் இருக்கிறது உலகம்!
காலம் நூறு நாக்குகள் கொண்டது. அது எதையும் தனக்குள் சுருட்டி விழுங்கிக்கொள்ளத் தயங்குவதே இல்லை. உலகத்தையே வெற்றிகொள்ளப் புறப்பட்ட நெப்போலியனும், ஊரைவிட்டு வெளியே போய் அறியாத விவசாயியும் அதற்கு ஒன்றுதான். இருவரும் ஒரே மண்ணுக்குள்தான் அடங்கியிருக்கிறார்கள்.
காலத்தில் மீதமிருப்பது எஞ்சிய பொருட்களும் சில சாட்சிகளும் மட்டும் தான். சாமுண்டீஸ்வரி மலையின் மீது நடந்து திரிந்தபோது அப்படித்தான் ஒரு குதிரையின் கால் எலும்பைக் கண்டெடுத்தேன். அந்த எலும்பைக் கையில் வைத்துப் பார்த்தபோதுதான் குதிரையின் பலம் எத்தகையது என உணர முடிந்தது. சரித்திரத்தின் நாயகனைப் போல கம்பீரமாக இருந்த குதிரைகள் இன்று கடற்கரை மணலில் சீந்த எவருமற்று ஒடுங்கி நிற்கின்றன. காலம் அதன் வாலில் சுழன்று ஆடிக்கொண்டே இருக்கிறது.
சரித்திரத்தின் நினைவுகள் பீடிக்காத மனிதர்களே இல்லை. நம் ஜாடையில், நடையில், சுபாவத்தில் மூதாதையர்களின் சாயல் இருப்பது சரித்திரம்தானே. ஏராளமான வீரர்கள் இரவு பகலாகக் காவல் காத்த கொத்தள பீரங்கி இன்று காக்கை எச்சம் படிந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதுதான் இன்றைய நிஜம்!
ச.தமிழ்செல்வனின் கதையன்று காலத்தின் மீதான நமது விருப்பத்தையும் அது கலைந்துபோகும் அவலத்தையும் துல்லியமாகச் சித்திரித்துக் காட்டுகிறது. ‘வாளின் தனிமை’ என்ற அந்தக் கதை ஒரு வீரவாளைப் பற்றியது. ஒரு மத்திய தர வர்க்கத்து மனிதனின் வாழ்வுக்குள் அந்த வாள் எப்படி அடங்க மறுக்கிறது என்பதைப் பற்றியது.
இந்தக் கதையில் தலைமுறை தலைமுறையாகச் சாகசம் செய்து வந்த வீரவாள் ஒன்றைத் தனது பைக்குள் வைத்துக்கொண்டு சுப்பையா என்ற குமாஸ்தா பயணம் செய்கிறான். பயணத்தின்போது அந்த வாள் அவனோடு பேசத் துவங்கிவிடுகிறது. சாகசம் செய்வதே வாழ்க்கை என்றிருந்த தன்னை இன்று சந்தனம், குங்குமம் இட்டு பூஜையில் வைத்துவிட்டார்களே என்று அந்த வாள் ஆதங்கப் படுகிறது.
தன் முன்னோர்களின் வாளுக்கு இந்தக் கதியா என்று மனம் புழுங்குகிறான் சுப்பையா. அதன் பழைய பெருமையை மீட்டு எடுப்பது தன்னுடைய கடமை என்று கருதி ஒரு சாமுராயைப் போல தன்னோடு உடைவாளை எங்கே போனாலும் கூடவே கொண்டுபோகிறான்.
இப்படிக் கொண்டுபோகும் சமயத்தில் போலீஸ் அவனை மடக்கிப் பிடித்து, பொது இடத்தில் ஆயுதம் கொண்டுபோகக் கூடாது என்று விசாரணை செய்கிறார்கள். அவனோ இது வீட்டு வாள்தானே என்று சமாதானம் செய்து தப்புகிறான். வாளுக்குத் தன்னை அவன் வீட்டு வாள் என்று சொன்னது, அசிங்கப் படுத்தியது போலிருக்கிறது.
நாளுக்கு நாள் சுப்பையாவுக்கு வாளின் மீது பிடிப்பு அதிகமாகி வர வர, அவனது குடும்பம் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் சுப்பையாவுக்கு லேசாகச் சித்தம் கலங்கிவிட்டதோ என்று சந்தேகப்படுகிறார்கள். சுப்பையா வாளிடமிருந்து அதன் கடந்த காலக் கதையைக் கேட்டு அறிந்துகொள்கிறான். அதன் வீரத்துக்கு எந்தப் பங்கமும் வந்துவிடாமல் அதைப் பாதுகாப்பது என்று முடிவு செய்து தன் தோளிலே தொங்கவிட்டுக்கொண்டு அலைகிறான்.
அவனது செயல், வாளைப் போலவே அவனையும் புறக்கணிக்கும்படியான நிலையை உருவாக்குகிறது. முடிவில் குழந்தைகள் மட்டுமே சாகசங்களின் மீது விருப்பம்கொண்டு இருக்கிறார்கள் என்று உணர்ந்தவனைப் போல சிறுவர்கள் புடை சூழ, தனது வாளைச் சுழற்றிக்கொண்டு அலைகிறான். வாள் காற்றின் அடுக்குகளில் பாய்ந்து சிதறுகிறது.
இக்கதை குடும்ப வரலாற்றின் மீதான மீள் பார்வையை முன்வைப்பதோடு, இன்றைய மனிதனின் பலவீனத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரம் வீரமும் சாகசமுமே வாழ்க்கை என்றிருந்த அந்தப் பசுமையான காலம் எத்தனை நகைப்புக்குரியதாகி விட்டது என்ற ஆதங்கத்தையும் இக்கதையில் காண முடிகிறது.
ஒரு கோப்பை தேநீரில் ஒரு மடக்கு குடித்து முடித்துவிட்டு, அடுத்த மடக்கு குடிப்பதற்கு கோப்பையை உயர்த்துவது கூட முக்கியமான சரித்திர நிகழ்வுதான். ஆனால், அந்த இரண்டு மடக்குகளுக்கு இடையில் என்ன நடக்கிறது என்பது ஒவ்வொரு தடவையும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் பெயர் தான் சரித்திரம் என்று ஜென் பௌத்தம் சொல்கிறது.
சரித்திரம் திறந்தே கிடக்கும் ஒரு முடிவடையாத புத்தகம். நாம் அதை அறிந்து கொள்வதற்கும் வாசிப்ப தற்கும் பழகவில்லை. சில வேளைகளில் பயந்து விலகியும் விடுகிறோம். காலம் ராவணனின் பத்து தலையைப் போல ஒரே உடலும் வெவ்வேறு முகமும்கொண்டு இருக்கிறது. அது சரி, பத்து தலையுள்ள ராவணன் பத்து கனவுகள் காண்பானா இல்லை, ஒரேயரு கனவு மட்டும் காண்பானா?
http://www.vikatan.com/av/2005/jun/19062005/av0602.aspச.தமிழ்செல்வன் கரிசல் வெக்கையைத் தனது எழுத்தில் பதிவு செய்த தனித்துவமான எழுத்தாளர். மிகக் குறைவான சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ள இவர் மக்கள் இயக்கங்களில் நேரடிப் பங்கு கொண்டு வருபவர். அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கங்களின் வழியாக மக்களை விழிப்படையச் செய்யும் தொடர்பணியை மேற்கொண்டு வருகிறார். இவரது Ôவெயிலோடு போய்...Õ என்ற சிறுகதைத் தொகுப்பு மிக முக்கியமானது. Ôவாளின் தனிமைÕ, Ôஅரசியல் எனக்குப் பிடிக்கும்Õ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். ஐம்பது வயதாகும் இவர், மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன். தபால் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தமிழ்செல்வன் நெல்லை மாவட்டம் பத்தமடையில் வசித்து வருகிறார்.