Wednesday, June 29, 2005

கிருஷ்ணன் நம்பி

மிதந்து செல்லும் கனவு

எஸ்.ராமகிருஷ்ணன்மாலை நேரமொன்றில் புத்தம் புதிய எண்டோவர் காரை நாகேஸ்வரராவ் பார்க்கின் முன்னால் நிறுத்திவிட்டு, இருவர் உள்ளே இறங்கிச் செல்வதைப் பார்த்தேன். இரண்டு நிமிஷ நேரத்தில் புழுதி படிந்த வேஷ்டியும் அரைக்கை சட்டையும் அணிந்து கையில் வேர்க்கடலைப் பொட்டலத்துடன் வந்த ஒரு பெரியவர், அந்த காரின் அருகில் வந்து, எக்கி நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தார். குனிந்து டயர்கள் எப்படி இருக்கின்றன என்றும் பார்த்தார்.

பிறகு, நீண்ட நாள் பரிச்சயமானவர் போல டிரைவர் முன்பு வேர்க்கடலைப் பொட்டலத்தை நீட்டியபடி, ‘வண்டி திருச்சி ரிஜிஸ்ட்ரேஷனா?’ என்று கேட்டார். டிரைவர் தலையாட்டினார். ‘வண்டியின் விலை என்ன? ஏ.சி. எப்படி வேலை செய்கிறது? பெட்ரோலா, டீசலா?’ என்று அடுத்தடுத்து கேட்டுக் கொண்டே இருந்தார். டிரைவர் சலிப்புற்றவராக, ‘நீங்கள்லாம் வாங்க முடியாது சார். எதுக்கு வீண் பேச்சு?’ என்றார்.

அதைக் கேட்டதும் பெரிய வருக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. Ôஏன்... விலைக்கு வாங்காட்டா காரைப் பத்தித் தெரிஞ்சுக்கிடக் கூடாதா? உலகத்தில் இல்லாத அதிசயமான காரு பாரு... நான் ஒண் ணும் படிக்காத முட்டாள் இல்லை. நானும் பத்து கம்பெனில வேலை செஞ்சவன்தான். உனக்குத் தெரிஞ்சதைவிட எனக்கு அதிகம் காரைப் பத்தி தெரியும். தெரிஞ்சு என்ன செய்யப் போறேன்னு நினைக்கிறியா? தாஜ்மகாலை நமக்குப் பிடிக்கும். அதுக்காக அதை விலை கொடுத்தா வாங்குறோம். அதே மாதிரி எட்ட இருந்தே பாத்துட்டுப் போறேன்.’’

டிரைவருக்குக் கோபம் அதிகமாகி இருக்க வேண்டும். ‘பொழுது போகலைனா என் உசிரை ஏன்யா எடுக்கிறே? வண்டியை தொடாமப் பேசு’ என்றார். பெரியவருக் கும் டிரைவருக்கும் பேச்சு முற்ற, பார்க்கில் என் எதிரில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டு இருந்த ஓர் இளைஞன், அவசரமாக வெளியே போய் அந்தப் பெரியவரை உள்ளே இழுத்து வந்தான். பூங்கா முழுவதும் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.

இதற்குள் வியர்வை வழிய நடைப் பயிற்சி முடித்துவிட்டு, காரின் உரிமை யாளர்கள் வெளியேற நடந்து வந்தார்கள். விருட்டென பெரியவர் எழுந்து அவர் களிடமே போய், ‘வண்டி ஆன் ரோடு என்ன விலையாகுது சார்?’ என்று கேட் டார். அவர்கள் முறைத்துப் பார்த்தபடி பதில் சொல்லாமல் போனார்கள். பையன் தலை கவிழ்ந்தபடி உட்கார்ந்து இருந்தான். பெரியவர் புல்தரையில் அமர்ந்து தனக்குத்தானே எதையோ பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த இளைஞன் என்னைப் பார்த்து சிரித்தான். Ôஅப்பா சார். அவருக்கு ஒரு சின்ன பிரச்னை’ என்றான். ‘அப்படியா’ என்று தலையாட்டினேன்.

Ôஎதைப் பார்த்தாலும் அவருக்கு ஆசை சார். சிட்டியில ஓடுற கார், புதுசா கட்டுற பிளாட், நியூ மாடல் பைக் இப்படி எதைப் பார்த்தாலும் உடனே விலை விசாரிச்சு நூறு கேள்வி கேட்பாரு. அவ்வளவு ஏன்... அண்ணா நகர்ல புதுசா ஒரு பீட்சா கார்னர் திறந்திருக் கிறதா பேப்பர்ல படிச்சுட்டு, பஸ் பிடிச்சு அங்கே போய் ஒவ்வொரு அயிட்டமா விலை விசாரிச்சிட்டு வந்தார். அவருக்கு வந்திருக்கிறது என்ன நோய்னு எங்களுக்குப் புரியலை. அவரால தினம் தினம் பிரச்னைதான்.’

பெரியவர், சற்று முன்பு நடந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரில் மக்காச்சோளம் விற்பவரிடம் என் னவோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு இருந்தார். பையன் பேச்சின் நடுவே அவர் என்ன செய்கிறார் என்று அடிக்கடி பார்த்துக்கொண்டான்.

Ôஎங்கப்பா முப்பது வருஷம் வேலை பாத்திருக்கார். எல்லா இடத்திலயும் இவரோட பேச்சைத் தாங்க முடியாம வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. இப்போ வேலைக்குப் போகலை. மந்தவெளில ஆயிர ரூவா வாடகை வீட்ல இருக்கோம். வீட்ல அம்மாவும் மூணு தங்கச்சியும் இருக்காங்க. அப்பாவுக்கு அது எதுவும் பெருசா தெரியலை சார்! எவனோ, எதையோ வாங்கிட்டா இவருக்கு என்ன? உலகத்திலே இவருக்குத் தெரியாம யாரும் எதுவும் வாங்கிரக் கூடாதுனு நினைக்கிறார். எதுக்கு இந்தப் பேராசைனுதான் தெரியலை. ‘சாப்பாடு’னு பேப்பர்ல எழுதிக் காட்டினா வயிறு நிறைஞ்சிடுமா சொல்லுங்க?’ என்றான்.

நகரம் ஆசைகளின் விளைநிலம். மாநகரச் சாலையில் நீங்கள் கடந்து போகும் ஒவ்வொரு நிமிஷமும் உங் களை அறியாமலே சிறியதும் பெரியது மாக ஆசைகள் துளிர்ப்பதும் அழிவது மாக இருக்கின்றன. புதுப்புது கார்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அண் ணாந்து பார்க்கவைக்கும் நட்சத்திர விடுதிகள். விதவிதமான டி.வி., ஹோம் தியேட்டர், நவநவீன உடைகள், காபி ஷாப், சைனீஸ் உணவு விடுதி, புதுப்புது வகை பைக்குகள், நகைக் கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள், பட்டாம் பூச்சி போன்ற இளம் பெண்கள், இப்படி காணும் ஒவ்வொன்றும் எவர் மனதிலோ ஒரு ஆசையின் விதையை ஊன்றுகிறது. அவர்கள் சில நிமிஷ நேர மாவது அந்தக் கனவில் உலவுகிறார்கள். கண்ணால் பார்த்தபடியே அதை ரசிக்கிறார்கள். பிறகு பெருமூச்சு விட்டவர் களாகக் கடந்து போய்விடுகிறார்கள். கடற்கரையில் நடந்து செல்லும்போது பதியும் ஈரமான காலடிகளைப் போல, ஆசைகள் நம் கண் முன்னே உருவாகி, கண்முன்னே அழிந்தும் விடுகின்றன.

மத்தியதர வாழ்க்கையை வாழும் மனிதன், ஆசைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை மனதில் ரகசியமாக எப்போதும் வைத்திருக்கிறான். அதைப் பற்றிச் சொந்த மனைவி, குழந்தையிடம்கூடப் பேசுவது கிடையாது. ஒருவேளை, தான் விரும்பியதை அடைய முடியாமல் போய்விட்டால், அவர்கள் தன்னைக் கேலி செய்வார்களோ, மதிக்க மாட்டார் களோ என்ற பயமாகக்கூட இருக்கக் கூடும். இதில் ஆண் & பெண் என்ற பேதமில்லை.

கீரைப்பாத்திகளில் கீரை வளர்வதை விடவும் வேகமாக ஆசைகள் வளர்ந்து விடுகின்றன. அடக்கப்பட்ட ஆசைகள் யாவும் அழிந்து போய்விடுவதில்லை. ஒன்றோ இரண்டோ அடங்க மறுத்துப் பீறிடும்போது மனிதன் தன் அவஸ்தை நிலையை மறந்து, ஆசையின் பின்னால் அலையத் துவங்கிவிடுகிறான்.

புதுமைப்பித்தனின் கதையன்றில் கடவுளைத் தனது வீட்டுக்கு அழைத்து வருவார் கந்தசாமிப் பிள்ளை என்கிற கதாபாத்திரம். வீட்டில் அவரது குழந்தை, ‘அப்பா, எனக்காக என்ன வாங்கி வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கும். கந்தசாமிப் பிள்ளை, ‘என்னைத்தான் வாங்கி வந்திருக்கிறேன்’ என்பார். உடனே குழந்தை, ‘உன்னைத்தான் எப்போதும் வாங்கிட்டு வர்றயே... ஒரு பொட்டுக்கடலை யாவது வாங்கிட்டு வரக் கூடாதா?’ என்று ஆதங்கத்துடன் கேட்கும்.

கந்தசாமிப் பிள்ளை என்ன பேசுவது என்று தெரியாமல் தலை குனிவார். அவருக்கு அருகில் நின்ற கடவுளும் குழந்தையை பார்க்கப் போகும்போது வெறுங்கையோடு வந்துவிட்டோமே என்று சோர்ந்து தலை குனிவார் என்று எழுதியிருப்பார் புதுமைப்பித்தன்.

இதுதான் மத்தியதர வர்க்க வாழ்வின் அடையாளம். இந்த வாழ்வில் உழன்று கொண்டு இருக்கும் ஒரு மனிதனின் மன விசித்திரத்தினை வெளிப்படுத்தும் அபூர்வமான கதை கிருஷ்ணன் நம்பியின் எக்ஸென்டிரிக். கிருஷ்ணன் நம்பியின் கதைகள் அன்றாட வாழ்வின் சுகதுக்கங்களைப் பதிவு செய்பவை.

1959&களில் ஒரு நிறுவனத்தில் குமாஸ்தா வாக வேலை செய்யும் ஒரு மனிதனின் சம்பள நாளில் துவங்குகிறது எக்ஸென்டிரிக் கதை. அவனுக்கு எண்பது ரூபாய் சம்பளம். புது நோட்டுகளாகத் தருகிறார்கள். சம்பளத்தைவிட அதிகக் கடனும் நெருக்கடியும் கொண்ட குடும்ப வாழ்க்கை. வீட்டில் மனைவி அவன் கொண்டுவந்து தரும் எண்பது ரூபாய்க்குள் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று தெரியாமல் மூச்சுத் திணறுகிறாள்.

சம்பளம் வாங்கிக்கொண்டு அலுவல கத்தைவிட்டு வெளியே வரும் அவன், ஒரு காபி குடிப்பதற்காக ஓட்டலுக்குச் செல்கிறான். தினமும் அவனது செலவுக் காக இரண்டணா தருகிறாள் அவனது மனைவி. அதில் ஒன்றரை அணா காபிக்கு, அரையணா ஒரு சிகரெட் பிடித்துக்கொள்வதற்கு. அதனால் ஒரு சிகரெட்டை வாங்கி இரண்டாக உடைத்து வைத்துக்கொண்டு, இரண்டு வேளைகளில் புகைக்கிறான் அவன்.

ஓட்டல் வாசலில் நீல நிறத்தில் புத்தம் புதிய கார் ஒன்று நிற்பதைக் காண்கிறான். அதனுள் ஒரு நாய்க் குட்டியை அணைத்தபடி குண்டான பெண் உட்கார்ந்திருக்கிறாள். அந்த காரும், பெண்ணும், நாய்க்குட்டியும் அவனது மனதில் பொறாமையை உருவாக்குகிறார்கள்.

அந்த காரில் தான் பயணம் போனால் எப்படி இருக்கும் என்று அவன் மனம் கற்பனை செய்கிறது. அந்தக் கற்பனை ஒரு கனவு போல விரிகிறது. கடல் நீலத்தில் ஒரு பட்டுப் புடவை கட்டிக்கொண்டு மனைவி அவனுடன் வர, இருவரும் மிக சந்தோஷமாக சரசமாடுவது போன்று நினைக்கும்போதே மனதில் ஆசை பூக்கத் துவங்கிவிடுகிறது. எல்லாவற்றுக்கும் பணம்தான் தேவையாக இருக்கிறது. ஆனால், அது தன்னிடம் இல்லை. நினைக்க நினைக்க, அவன் மீதே அவனுக்கு ஆத்திரமாக வருகிறது.

‘பசித்த வேளையில் ஒரு டிபன் சாப்பிடக்கூட முடியாமல் என்ன வாழ்க்கை இது? எதற்காக இப்படி வாழ்கிறோம்?’ என்று தோன்றுகிறது. அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வராது, நாம்தான் அதைத் தேடிப் போக வேண்டும் என்று நினைத்தவுடன் அவனுக்குத் தனது சம்பளப் பணம் முழுவதையும், அன்று இரவுக்குள் செலவு செய்து தீர்த்துவிட வேண்டும் என்ற வெறி உண்டாகிறது. ஓட்டலுக்குள் புதிய மனிதனாக நுழைகிறான்.

வீட்டில் இருக்கும் ஆயிரம் கடன் களும் அவன் கண்ணைவிட்டு மறைந்து போகின்றன. ஓட்டலின் முன்பு எதிர்ப்படும் மூட்டை தூக்கும் ஒருவனையும் அழைத்துக்கொண்டு சாப்பிட நுழைகிறான். விதவிதமான உணவுகளைத் தருவித்துச் சாப்பிடுகிறார்கள். சர்வருக்கு ஒரு ரூபாய் டிப்ஸ் தருகிறான். ஓட்டலை விட்டு வெளியே வந்து டாக்சி பிடித்து கடற்கரைக்குப் போகிறான். கடற்காற்று ஏகாந்தமாக இருக்கிறது. இந்த ஒரு நாளுக்குள் வகைவகையான இன்பங்களை அனுபவித்துவிட வேண்டும் என்ற ஆசை பொங்குகிறது.

பின், டாக்சியில் ஏறி ஒரு சினிமாவுக் குப் போகிறான். படம் விட்டதும் வெளியே வந்து எங்கே போவது என்று தெரியாமல் டாக்சி டிரைவரிடமே எங்கே போகலாம் என்று கேட்கிறான். இருவரும் ஒன்றாகக் குடிக்கிறார்கள். பாலக்காட்டுப் பெண் ஒருத்தியிடம் கூட்டிப் போகிறான் டிரைவர். யாவும் முடிந்து இரவு வெளியே வரும்போது அப்படியும் பத்து ரூபாயும் இரண்டணாவும் மீதமிருக்கிறது.

வழியில் தென்பட்ட பிச்சைக்கார னுக்கு இரண்டணா தானம் தருகிறான். வீட்டை நெருங்கும்போது பையில் உள்ள பத்து ரூபாயை என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே எடுக்க முயற்சிக்கிறான். பணத்தைக் காண வில்லை. எங்கோ வழியில் தொலைந்து போயிருக்கிறது. வீட்டுக் கதவைத் தட்டு கிறான். மனைவி தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறக்கிறாள். சம்பளம் வாங்க வில்லையா என்று கேட்கிறாள். நாளைக்குத்தான் சம்பளம் என்று சொன்னபடி அவன் வீட்டுக்குள் நுழைவதாக கதை முடிகிறது.

எளிய விருப்பங்களைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத வாழ்வின் கசப்பு ஒரு நாளில் முற்றிப் பீறிடுவதை இக்கதை துல்லியமாக வெளிப் படுத்துகிறது. விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை. அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. இரண்டுக்கும் நடுவில் மத்தியதர மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி, அதனுள் ஊசலாடிக்கொண்டு இருக்கிறான். என்ன செய்வது... எட்டுக் கால்கள் இருந்தும் சிலந்தி தன் வலைக்குள்தானே ஊர்ந்து அலைகிறது! நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த அழகிய பாண்டியபுரத்தில் 1932&ல் பிறந்தவர் கிருஷ்ணன் நம்பி. இவரது இயற்பெயர் அழகிய நம்பி. சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும் எழுதியிருக்கிறார். நெருக்கடியில் உழலும் மனிதனின் சுகதுக்கங்களை மெல்லிய பகடியான தொனியில் விவரிப்பவை இவரது கதைகள். ‘யானை என்ன யானை’ என்ற குழந்தைகள் கவிதைத் தொகுப்பும் நீலக்கடல், காலை முதல் என்னும் சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. 1976&ம் வருஷம் தனது 44 வயதில், எதிர்பாராத நோய்மையால் மரணமடைந்தார் கிருஷ்ணன் நம்பி.


http://www.vikatan.com/av/2005/aug/21082005/av0602.asp